CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-01

சினிமா கட்-அவுட் இல்லாமல் களையிழந்த சென்னை




சென்னை போன்ற பெருநகரங்களில் நள்ளிரவு இருட்டை கிழித்துக் கொண்டு ஒளி தரும் சாலையோர விளக்குகளுக்கு பிறகு ரொம்ப பேமஸ் கட்-அவுட்கள்தான். தனியார் நிறுவனங்கள் ஒருபுறம் போட்டி போட்டுக் கொண்டு விளம்பர கட்-அவுட்களை வைத்துக் கொண்டிருந்தது. இன்னொருபுறம் தமிழ், இந்தி சினிமாக்களின் பிரமாண்ட கட்-அவுட்கள் மீதியிருந்த இடங்களை ஆக்கிரமித்து வந்தன. இதில் கிளுகிளுப்பான கட்-அவுட்களே அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அங்க அவயங்களை அப்பட்டமாக காட்டும் நடிகைகளின் கவர்ச்சிப்படங்கள் வாகன ஓட்டிகளை ரொம்பவே கவர்ந்து இழுத்தது. (ஒருசிலர் கருமம்... என்ன இது இப்படியெல்லாம் கட்-அவுட் வெச்சிருக்காங்க என்று தலையில் அடித்துக் கொண்‌டே ரசித்து விடுவார்கள்!)

சரி... மேட்டருக்கு வருவோம். இப்படி கண்ணா பிண்ணான்னு கட்-அவுட் இருந்தா கவனச்சிதைவு அதிகமாகி ஆபத்தில் போய் முடியும் என்று கருதிய பொதுநலநோக்கர்கள் கோர்ட்டில் முறையிட்டனர். கட்-அவுட்களை அகற்ற அதிரடிஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சியினர் பிரமாண்ட கட்-அவுட்களையெல்லாம் வேறோடு பிடுங்கி விட்டனர். இதனால் இப்போது பளிச்சென இருந்த சென்னை இப்போது வெறீச் ஆகி விட்டது.

கட்-அவுட் அகற்றம் குறித்து ‌டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் 2 பக்க கட்டுரை போட்டிருக்கிறார்கள். அதில் தயாரிப்பாளர் தாணு, மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என பலரிடம் கருத்து கேட்டு வெளியிட்டுள்ளனர். இதனால் நானும் என் பங்குக்கு சிலரிடம் கருத்து கேட்டேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? கட்-அவுட்கள் இல்லாமல் புதுமையாகத்தான் இருக்கிறது. கிராமப்புறங்களிலேயே காதுகுத்து விழாவுக்கெல்லாம் கட்-அவுட் வைக்கிற இந்த காலத்தில் சிட்டியில் கட்-அவுட் வைக்க தடை விதித்திருப்பது சரியில்லைதான். சினிமா கட்-அவுட்களை அகற்றியதற்குப் பதிலாக வரைமுறைப்படுத்தியிருக்கலாம், என்றார்கள்.

கல்லூரி மாணவர் ஒருவரி‌டம் இதுபற்றி கேட்பதற்காக போன் செய்தேன். அதற்கு அவர், நான் சிக்னலில் இருக்கிறேன் என்றார். சரி.. அப்புறம் பேசுகிறேன் என்றேன். அதற்கு அவர், இல்லை இப்போதே பேசுங்கள். நான் சிக்னலில் சும்மாத்தான் நிற்கிறேன். முன்னாடியெல்லாம் சிக்னலில் நிற்கும்போது கட்-அவுட்களை ரசிப்பேன். இப்போதான் அது இல்லையே... என்று நான் கேட்பதற்கு முன்பாகவே தனது கருத்தை தெரிவித்தார். ஓ.கே. நான் அப்புறமா பேசுகிறேன் என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்து விட்டேன். இதே கமெண்ட்தான் இன்னும் சில மாணவர்கள், மாணவிகளில் வாயில் இருந்தும் வந்தது.

கட்-அவுட்கள் எந்த அளவுக்கு இளசுகளுக்கு பயன்பட்டிருக்கிறது(!) பார்த்தீர்களா? மொத்தத்தில் கட்-அவுட் இல்லாமல் சென்னை களையிழந்து விட்டது என்றே ‌பலரும் சொல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வரைமுறைப்படுத்துதல் என்று நச் கமெண்ட் கொடுத்துள்ளனர். அதை செய்யலாமே மாநகராட்சி நிர்வாகம்?

1 comments:

Ganeshkumar said...

நிருபரின் டைரிக்குறிப்பில் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். தாங்கள் சினிமா நிருபரானால் நிறைய கிசுகிசுக்கள் இருக்குமே... அதையும் கொஞ்சம் எடுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்பது என்னைப்போன்ற சினிமா ரசிகர்களின் கருத்து. கிசுகிசுப்பீர்களா நிருபரே... கிசுகிசுப்பீர்களா?

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!