2008-05-15
அசினுக்கு ஆப்பு வைக்கும் தமிழ்சினிமா
அசினுக்கு ஆப்பு என்றதும் பயந்து விடாதீர்கள் அசின் ரசிகர்களே!
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததும், கர்நாடகாவில் தமிழ் சினிமாக்கள் ஓடிய தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனை கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கர்நாடகாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பிறப்பால் கன்னடர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆக்ஷன் கிங் அர்ஜூன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பார்களத, மாட்டார்களா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதெல்லாம் பழைய கதை...! விஷயத்துக்கு வருவோம். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு சில நடிகர்களும், பல நடிகைகளும் பங்கேற்கவில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அசினும் வரவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் நடந்த தசாவதாரம் விழாவுக்கு வந்த நடிகை அசின், அப்படியே நடிகர் சங்கத்திடம் ஒரு விளக்கக் கடிதத்தையும் கொடுத்து விட்டு சென்றார். உண்ணாவிரத போராட்டத்துக்கு வராதது ஏன்? என்பதற்கு விளக்கம்தான் அந்த கடிதத்தில் இருந்தது. உண்ணாவிரதம் நடந்த நாளில் தான் இந்தி கஜினி படத்தின் சூட்டிங்கில் இருந்ததாகவும், சூட்டிங்கை திடீரென ரத்து செய்ய முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். ஆனால் சம்பவத்தன்று கஜினி சூட்டிங் நடைபெறவில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.
நடிகை அசின் உண்ணாவிரதம் பற்றி தெரிந்து கொண்டே வராமல் இருந்து விட்டார். அவரது விளக்க கடிதத்தையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அசின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில் நடிகர் சங்கம் இருக்கிறது. இதற்கு காரணம் கமல்ஹாசன்தானாம்.
கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து அசின் நடித்துள்ள தசாவதாரம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அசின் மீது நடவடிக்கை எடுத்தால் தசாவதாரம் ரீலிசிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க யோசித்து வருகிறார்கள் சங்க நிர்வாகிகள். அதே நேரத்தில் அசினுக்கு இந்தியில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் திரையுலகம் தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை என்றே அசின் கூறி வருகிறாராம்.
கொசுறு தகவல் : சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகை திவ்யா (குத்து ரம்யா), பெங்களூருவில் கன்னட திரையுலகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தமிழ்நடிகர்கள் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் சென்னையில் வந்து உண்ணாவிரதம் இருந்திருந்தால் மட்டும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்குமா? என்று பதில் கேள்வி கேட்டு கோபப்படுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!