2008-05-15
தசாவதாரம் : கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட புது தகவல்
உலக நாயகன் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள படம் தசாவதாரம். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மாதம் நடந்தது. இதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹசன், இதுவரை தசாவதாரம் படத்தைப் பற்றிய செய்திகள், கதையை ரகசியமாக வைத்திருந்தோம். இனி மெல்ல மெல்ல தசாவதாரம் படம் பற்றிய செய்திகள் கசியும், என்றார்.
அவர் எதை வைத்து சொன்னாரோ தெரியவில்லை. அவர் சொன்னதுபோலவே தசாவதாரம் பற்றிய தகவல்கள் (கோர்ட்டில்) தினம் தினம் வெளியாகி வருகின்றன.
தசாவதாரம் படத்தில் உள்ள பல காட்சிகள் வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளன என்று இன்டர்நேஷனல் வைஷ்ணவ தர்மா சம்ரக்ஷணா சங்க தலைவர் கோவிந்த ராமானுஜதாசர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள காட்சிகளை, இப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.
நீதிபதிகள் ராஜசூர்யா, சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்விசாரணையின்போது தசாவதாரம் படம் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவ்வழக்கு தொடர்பாக தசாவதாரம் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கோர்ட்டில் அளித்துள்ள மனுவில் தசாவதாரம் குறித்து பல புது தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
பனிரெண்டாம் நூற்றாண்டு வரலாற்றில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள்தான் தசாவதாரம் படத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழக அரசு வெளியிட்ட வரலாற்று புத்தகங்கள் அடிப்படையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, பிற்கால சோழர் சரித்திரம் பகுதி-2, தமிழ்நாட்டு வரலாறு, சோழ பெருவேந்தர் காலம் ஆகிய புத்தகங்களில் உள்ள கருத்துக்கள் அடிப்படையில்தான் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமானுஜரை, ஸ்ரீரங்கநாதர் சிலையோடு சேர்த்து கட்டி கடலில் தள்ளிவிடுவது போன்ற காட்சி இருப்பதாக கூறுவது தவறு. தசாவதாரம் என்ற பெயர் காப்புரிமை கொண்ட பெயரல்ல. இந்த பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை. கமலஹாசன், வைஷ்ணவர் பாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணுவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வது போன்ற காட்சி அமைந்துள்ளன. ஓம் என்ற மந்திரத்தின் மீது நடிகர் கமலஹாசன் கால் வைத்து ஏறுவது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், பகவத் கீதை புத்தகத்தின் மேல் கால் வைத்து ஏறுவது போலவும் காட்சிகள் அமைந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற காட்சிகள் அமையவில்லை. சைவர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும் இடையே வன்முறை மோதல் இருப்பது போலவும் காட்சிகள் இடம்பெறவில்லை. ராமானுஜசாரியார் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவில்லை. எனவே இந்த படத்தில் உள்ள எந்த காட்சியையும் நீக்கத் தேவையில்லை.பல வைஷ்ணவ நண்பர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். கடவுள் விஷ்ணுவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த படத்தை முழுமையாக திரையிட அனுமதிக்க வேண்டும்.மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.
இவ்வாறு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
௦
மத்திய தணிக்கை குழு அதிகாரி பாபு ராமசாமி தாக்கல் செய்த மனுவிலும் தசாவதாரம் பற்றிய புது தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், தசாவதாரத்தில் கமல்ஹாசன் ராமானுஜர் வேடத்தில் நடிக்கவில்லை. ராமானுஜரின் உண்மையான சிஷ்யரான ரங்கராஜன் நம்பி வேடத்தில் அவர் நடித்து, குரு பக்திக்காக தியாகம் செய்வதாக கதை அமைந்துள்ளது. சிதம்பரம் கோவிலில் உள்ள கோவிந்தராஜர் சிலையை அகற்ற முயன்றபோது அரசரின் வீரர்களோடு சண்டைபோடுவது போன்ற காட்சி அமைந்துள்ளது. இந்த படம் எந்த வகையிலும் மத உணர்வை பாதிக்கும் வகையிலோ, மோதலை ஏற்படுத்தும் வகையிலோ அமையவில்லை. இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அப்படியிருக்க, அதற்கு முன்பாகவே வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை வரும் 20ம் தேதி நடைபெறவிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!