2008-05-28
சினிமா ஆசை காட்டி பெண்ணிடம் மோசடி : அசின் மீது புகார்
சினிமா ஆசை காட்டி இளம்பெண்ணிடம் மோசடி செய்தததாக நடிகை அசின் மீது சென்னை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகாரை நடிகை அசின் மறுத்துள்ளார்.
நடிகை அசின் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். தற்போது இந்தி கஜினி பட சூட்டிங்கில் இருப்பதால் கடந்த டிசம்பர் மாதம் முதல் மும்பை போய் குடியேறி விட்டார். சென்னை வீட்டில் இருந்தபோது தேனாம்பேட்டையை சேர்ந்த பியூலா என்ற 20 வயது இளம்பெண் அசின் வீட்டில் வேலை செய்து வந்தார். அவரும் தற்போது அசினுடன் மும்பை சென்று விட்டார்.
இந்நிலையில் இளம்பெண் பியூலாவின் தாயார் நர்சம்மா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனது மகள் பியூலாவை நடிகை அசின் கொடுமை படுத்துகிறார். பியூலாவை பார்க்க அசின் வீட்டார் என்னை அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி என் மகளை ஏமாற்றி வைத்துள்ளனர். எனக்கு உடல்நிலை சரியில்லாததால், நான் இறப்பதற்குள் எனது மகளை பார்க்க விரும்புகிறேன். போலீசார்தான் எனது மகளை மீட்டுத்தர வேண்டும்,என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் நடிகை அசினிடமும், அசின் குடும்பத்தாரிடமும் போனில் விசாரணை நடத்தினர். அப்போது அசின் விரைவில் சென்னைக்கு வரவிருப்பதாகவும், அப்போது பியூலாவை அழைத்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து போலீசார் சென்னை வந்த பிறகு அசினிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த புகார் குறித்து நடிகை அசினிடம் போனில் விசாரித்தோம். அப்போது அவர் கூறுகையில், பியூலா எங்கள் வீட்டில்தான் இருக்கிறார். நல்லபடியாகத்தான் இருக்கிறார். அவரது தாயார் கவலைப்பட வேண்டாம். எனக்கு யாரையும் ஏமாற்றியோ, கொடுமைப்படுத்தியோ பழக்கமில்லை. இப்போது மும்பையில் இந்தி கஜினி சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அது முடிந்த பின்னர் சென்னை வருவேன். பியூலாவும் என்னுடன் வருவார். இரண்டு மாதங்களுக்கு முன்பே பியூலாவை சென்னைக்கு போய்விட்டு வருகிறாயா? என்று கேட்டேன். ஆனால் அவர்தான், நீங்க போகும்போது சேர்ந்து போவோம் என்று கூறிவிட்டார். வேண்டுமானால் பியூலாவிடமே கேளுங்கள் என்று கூறி பியூலாவிடம் போனை கொடுத்தார்.
பியூலா நம்மிடம் பேசுகையில், நான் லாஸ்ட் டிசம்பர்ல சென்னைல இருந்து அசின் மேடம் கூட மும்பை வந்தேன். அப்புறம் வீட்டுக்கு போகவில்லை. அம்மாவுக்கு சம்பளத்தையும் அனுப்பவில்லை. அதனால்தான் அம்மா இப்படி புகார் கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். அம்மாவிடம் நான் வாரம் ஒருமுறையாவது போனில் பேசுவேன். இங்கு நான் நல்லபடியாக இருக்கிறேன். என்னை சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று அசின் மேடம் சொன்னதில்லை. என்னை அவர் அடைத்து வைத்திருக்கவும் இல்லை. சந்தோஷமாக இருக்கிறேன், என்றார்.
Labels:
asin
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!