2008-08-01
ரஜினி பேனரை கிழித்தெரிந்த ரசிகர்கள் : இதுவும் குசேலன் கூத்துதான்!
கன்னட அமைப்பினர் மிரட்டலால், நடிகர் ரஜினிகாந்த் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததைக் கண்டித்து கோவையில் குசேலன் பட பேனர்களை ஒரு கும்பல் கிழித்து எறிந்தது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் குசேலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பஸ்களுக்கு தீ வைத்து, தமிழ் திரைப்படங்கள் ஓடிய தியேட்டர்களை சூறையாடினர். இதைக் கண்டித்து சென்னையில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கடுமையாக கண்டிக்கிறேன். தமிழகத்துக்கு சொந்தமான ஒகேனக்கலுக்கு அவர்கள் எப்படி சொந்தம் கொண்டாடலாம். இதற்காக அவர்களை உதைக்க வேண்டாமா என்று ஆவேசமாக பேசினார்.
ரஜினியின் இந்தப் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பினர் கூறினர். இந்நிலையில், ரஜினி நடித்த Ôகுசேலன்Õ படம் இன்று ரிலீசானது. இதை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். கன்னடர்களிடம் ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, அங்கு குசேலன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால் உடனடியாக தனது உண்ணாவிரத பேச்சுக்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக கன்னடர்களை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. இந்த விஷயத்தில் கன்னடர்களிடம் நான் பாடம் கற்றுக் கொண்டுள்ளேன். இனிமேல் பேசும்போது எச்சரிக்கையாக பேசுவேன். என் பேச்சால் கன்னடர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதையேற்று, நான் நடித்து வெளிவரும் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க வேண்டும்Õ என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ரஜினியின் இந்த திடீர் அறிவிப்புக்கு தமிழக ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவையில் நேற்றிரவு ரஜினியின் குசேலன் பட பேனர்களை சிலர் கிழித்தனர். பூ மார்க்கெட் அருகே உள்ள அர்ச்சனா தியேட்டர் முன்பு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திரண்ட ரசிகர்கள், ரஜினிக்கு எதிராக கோஷமிட்டு தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த 12 பேனர்களை கிழித்து சேதப்படுத்தினர்.
இதுபற்றி ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சென்று பேனர்களை கிழித்துக் கொண்டிருந்த ரஜினி ரசிகர்கள் ஆர்.எஸ்.புரம் சித்தி விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த சரவணகுமார் (30), சந்தோஷ்குமார் (23), மருதாசலம் வீதியைச் சேர்ந்த அருண்சங்கர் (28), பூ மார்க்கெட்டைச் சேர்ந்த சரவணன் (29), சர் சண்முகம் வீதியைச் சேர்ந்த அருள்பிரகாஷ் (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 427 (சேதப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த தியேட்டர் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கோவையில் குசேலன் படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து தியேட்டர்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தி-படம் : தமிழ்முரசு
(குறிப்பு : ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டதில் எனக்கும் உடன்பாடு இல்லாத காரணத்தால் ரஜினிக்கு எதிராக ரசிகர்களே கிளம்பிய செய்தியை எமது வாசக நண்பர்களும் படிப்பதற்காக வெளியிட்டுள்ளேன்).
Labels:
Kuselan,
rajinikanth
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//ரஜினி ரசிகர்கள் ஆர்.எஸ்.புரம் சித்தி விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த சரவணகுமார் (30), சந்தோஷ்குமார் (23), மருதாசலம் வீதியைச் சேர்ந்த அருண்சங்கர் (28), பூ மார்க்கெட்டைச் சேர்ந்த சரவணன் (29), சர் சண்முகம் வீதியைச் சேர்ந்த அருள்பிரகாஷ் (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 427 (சேதப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. //
ரஜினி ரசிகர்கள் மானம் கெட்டவர்கள் என இனியாரும் சொல்ல முடியாது !
:)
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
நிருபரே படம் பற்றிய உங்கள் விமர்சனம்?
குப்பையாகிப்போன குசேலன் தோல்விக்கு காரணம் சொல்ல மானமுள்ள ரசிகர்களுக்கும்,(மெ)மகா இயக்குனருக்கும் ஒரு சம்பவம் கிடைத்தது,
கோவிகண்ணன், முரளிகண்ணன், ஷாஜகான் ஆகியோரின் பின்னூட்டத்துக்கு நன்றி.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!