2008-08-21
பத்திரிகைகள் மீது கமல்ஹாசன் பாய்ச்சல்
மர்மயோகி பட விவகாரத்தில் பத்திரிகைகள் வெளியிட்டு வரும் செய்திகளை மறுத்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன், பத்திரிகைகளையும் தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபகாலமாக நான் எழுதி, இயக்கித் தயாரிக்கும் 'மர்மயோகி' பற்றி பல புனை சுருட்டுக்கள் செய்திகளாக ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் வந்தவண்ணம் உள்ளன.
கிடைக்கும் விளம்பரத்திற்கு நன்றி சொல்லும் அதே வேளையில், செய்தியின் பிழைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது என் கடமையாகிறது. 'மர்மயோகி' பற்றிய பெரும்பாலான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாக இருப்பது எங்களைப் பொருத்தவரை ஆரோக்கியமான விளம்ரமுமில்லை. உங்களைப் பொருத்தவரை நேர்மையான செய்தியும் இல்லை.
ராஜ்கமல் நிறுவனமும், பிரமிட் சாய்மீரா குரூப்பும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் ஒன்று இருக்கையில், பத்திரிக்கை வாயிலாகப் பங்காளிகள் கூடுவது நல்லதல்ல. இருவர் சம்மதத்துடன் கூடிய உறவுகளே சுமுகமாகவும் சந்தோஷமாகவும் விளங்கும். ஒருதலை உறவு சங்கோஜங்களையே விளைவிக்கும்.
செய்திகளை முந்தித் தருவதிலும் முதலில் தருவதிலும் உள்ள ஆர்வத்தைவிட, ஆதாரத்துடனும் நேர்மையுடனும் செய்திகளைச் சேகரிப்பதே நம்பகமான பத்திரிகைக்கு அழகு என்பதை நீங்கள் உணர்ந்துள்ளது போலவே நானும் ஆதரமற்ற செய்திகள் அவதூறுக்கு நிகரானது என்பதே என் தாழ்மையான கருத்து. நவீன கார்ப்பரேட் யுகத்தில், பத்திரிகை வாயிலாக வியாபாரம் பேசுவது தொழில் ஒழுக்கமல்ல. இத்தகைய உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடாமல் தவிர்த்த ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய செய்திகளை வெளியிட்ட நாள், வார இதழ் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். செயதிகளை எங்களிடமிருந்து பெறுவதற்கான எல்லா சாளரங்களும் தயார் நிலையில் உள்ளன. எங்கள் செய்தித் தொடர்பு பிரிவுகளின் மூலம் கிடைக்கும் செய்திகள் உண்மையாக இருக்கும். அந்தப் பிரிவுகள் செய்திகள் சொல்லாதபோது சொல்வதற்கு தற்போது ஏதுமில்லை என்ற பொருளையே பத்திரிக்கை நண்பர்கள் கொள்ளவேண்டும்.
பல மில்லியன் டாலர்கள் செலவில் தயாராகும், பன்மொழிப் படமான 'மர்மயோகி' உலக தரப்படமாகவும் உங்களுக்கு பரிமாறப் படவேண்டும் என்பதில் ராஜ்கமல் நிறுவனமும் பிரமிட் சாய்மீரா குரூ்பபும் பேரார்வத்துடன் இயங்கி வருகின்றன. விரைவில் துவக்கவிழா பற்றிய செய்திகளை அறிவிப்போம். 'மர்மயோகி'யை மக்களுக்கு நல்ல முறையில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு எமது மட்டுமல்ல, உமதும் தான் என்பதை என் பத்திரிக்கை தோழர்களுக்கு நினைவுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Labels:
kamalhasan,
marmayogi
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!