நடிகர்-நடிகைகள் : விஷால், நயன்தாரா, உபேந்திரா, கோட்டா சீனிவாசராவ் மற்றும் பலர்
இயக்குனர் : ஏ.ராஜசேகர்
தயாரிப்பு : ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
துணிச்சலான போலீஸ் அதிகாரி உபேந்திரா. அவரைப் பார்த்து போலீஸ் வேலையில் சேர்கிறார் விஷால். தப்பு செய்பவர்களைத் தண்டிக்கிறார். இந்நிலையில் முதல்அமைச்சர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்கிறார். அவரது பதவியை கைப்பற்றும் ஆசையுடன் கோட்டா சீனிவாசராவ் உள்பட 4 மந்திரிகள் காய் நகர்த்துகின்றனர். அடியாட்களை வைத்து சக மந்திரிகள் 3 பேரையும் தீர்த்துக்கட்டச் சொல்கிறார் சீனிவாசராவ். அவர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால் கொன்றது தனது அடியாள் இல்லை, வேறொரு நபர் என்று தெரிந்ததும் திகிலடைகிறார்.
திடீர் கொலைகாரனை கண்டுபிடிக்கச் சொல்லி விஷாலுக்கு உத்தரவிடுகிறார். தீவிர வேட்டைக்கு பின் கொலையாளியை பிடிக்கும் விஷாலுக்கு அதிர்ச்சி. அவரை பிடித்து ஜெயிலில் போடுகிறார். இதற்கிடையில் குழந்தைகள் சாப்பிடும் ஐஸில் போதை மருந்து கலக்கும் சீனிவாசராவின் அடியாள் குட்டு வெளிப்படுகிறது. அவரை பிடியில் சிக்க வைக்கிறார் விஷால். ஆனால் சட்டத்தின் ஓட்டையில் அவர் தப்பிப்பதுடன், விஷால் மீதே கொலைக்குற்றம் சுமத்தி சிறையிலடைக்கின்றனர். ஜெயிலிலிருந்து தப்பிக்கும் விஷால் எதிரிகளை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
ஆறடி உயரம், சிக்ஸ்பேக் உடற்கட்டு என விஷால். அதிரிபுதிரியாக ரவுடிகளை அந்தரத்தில் பறக்கவிட்டு அறிமுகமாகிறார். ஆக்ஷன் ஹீரோவாக அத்தனை பலத்தையும் கொட்டியிருக்கிறார். காரில் சென்ற சந்தானபாரதி ராக்கெட் லாஞ்சர் வீசி கொலை செய்யப்பட்டதை கண்டுபிடிக்கும் சாதுர்யம் கலக்கல். அடுத்த மந்திரியை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்று எதிர்பார்க்கும்போது போலீஸ் வளையத்துக்குள்ளேயே பெண் மந்திரி சுட்டுக்கொல்லப்படுவதை தடுக்க முடியாமல் தவிப்பது ஏமாற்றம்.
கொலைகாரன் இன்சூலின் ஊசி போட்டுக் கொள்பவன், மாம்பலம் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கியவன் என்ற கையில் கிடைத்த துப்புக்களை வைத்து கொலையாளி இருப்பிடத்தை விஷால் கண்டுபிடிப்பது நச். விமானத்தில் ஏற சொகுசு பஸ்ஸில் செல்லும் மந்திரியை உபேந்திரா கழுத்தை நெறிப்பது பரபர. அடுத்த சில நிமிடத்தில் பஸ் வெடித்து சிதறும்போது அருகிலிருக்கும் விஷால் காயமின்றி தப்புவது த்ரில். தப்பி ஓடும் உபேந்திராவை துரத்தி பிடிக்கும் விஷால், அவரது முகத்தை பார்த்ததும் அதிர்வது திருப்பம்.
தாய் மீது பாசம் கொட்டும் விஷால் அவரை கொன்றுவிட்டார்கள் என்று தெரிந்ததும் நேராக கொள்ளி வைக்க தயாராகுமிடத்தில் சென்டிமென்ட் மிஸ்ஸிங். கிளைமாக்ஸில் மந்திரியின் நெற்றிப்பொட்டிலும், ரவுடியின் நெற்றிப்பொட்டிலும் துப்பாக்கியை வைப்பதில் தெலுங்கு வாடை. ஆனால் நெஞ்சில் குண்டு பாய்ந்த பிறகும் வசனம் பேசிக்கொண்டு, சல்யூட் அடித்தபடி நிற்பது சினிமாத்தனம்.
பாடல் காட்சிகளில் நயனுடன் நெருக்கம் சூடுபறக்கிறது. ஹோம் அலோன் பாணியில் நயன் நடத்தும் காமெடி கூத்து ரகளை. செந்தில், பிரம் £னந்தம் சிரிப்பூட்ட பாடாய்படுகின்றனர். ஆக்ஷன் காட்சிகளில் ஆர்.டி.ராஜசேகரின் கேமரா பாய்ந்து எழுகிறது.
விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக்க அத்தனை வித்தைகளையும் கையாண்டிருக்கும் டைரக்டர் ஏ.ராஜசேகர், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பால் பப்பாளி மட்டும் ஆட வைக்கிறது.
சத்யம் - சத்யசோதனை
- இது தினகரன் நாளிதழில் வந்திருக்கும் சத்யம் படத்தின் விமர்சனம்.
இதோ எனது ஒரு சிறு விமர்சனம்.
நடிகர் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம் சத்யம். நெஞ்சில் குண்டு பாய்ந்த பிறகும் டயலாக் பேசி சல்யூட் அடிக்கும் போலீஸ் விஜயகாந்த் டைப் படம் என்று ஒரே வரியில் விமர்சித்து விடலாம். சில காட்சிகள் காக்க காக்க சூர்யாவை நினைவுபடுத்துவதும், நயன்தாராவின் கிளுகிளுப்பும் மட்டுமே ஆறுதலான விஷயம். திரைக்கதையிலும், டயலாக்கிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சத்யம் ஜெயித்திருக்கும்.
- சினிமா நிருபர்
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!