சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். இது ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைய அஸ்திவாரம் போடும் கூட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
1996ம் ஆண்டு பாட்ஷா பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது என்றார். இது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை வெறுப்பேற்றியதால், ரஜினிக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் ஈடுபட்டனர். ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அரசியலுக்கு நேரடியாக வர விரும்பாத ரஜினிகாந்த், அப்போதைய தேர்தலில் ஜி.கே.மூப்பனார் தலைமையில் இருந்த த.மா.கா., மற்றும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். சைக்கிள் சின்னத்துக்கும், உதயசூரியனுக்கும் ஒட்டு போடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ரஜினிக்காக எதையும் செய்யத்துணிந்த ரசிகர்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை படுதோல்விக்கு தள்ளினார்கள். ரஜினியின் வாய்ஸ்க்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை 1996 சட்டமன்ற தேர்தல் நிரூபித்தது. அன்று முதல் இன்று வரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டு என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளது. ரஜினியும் பாட்ஷாவுக்கு பிறகு வந்த முத்து, அண்ணாமலை, படையப்பா என பல படங்களில் அனல் தெறிக்கும் அரசியல் வசனங்களை பேசி கைத்தட்டல் பெற்றார். இருப்பினும் அரசியல் குறித்து எந்தவித தெளிவான பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தார். இன்று வரை அவரது நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையில் ரஜினிக்கு எதிராக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியான பேட்டியொன்றை கொடுத்தார். சிகரெட் பிடிப்பது தொடர்பாக பேட்டியளித்த அவர் ரஜினியை நேரடியாகவே தரக்குறைவாக விமர்சித்தார். பாபா படத்தை ஓட விடாமல் செய்வோம் என்று பாமகவினர் தெரிவித்தனர். அப்போதும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் கோரினார்கள். ஆனால் ரஜினி தெடர் மவுனியாகவே இருந்தார். பாபாவும் படு பிளாப்பானது. அந்த நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசினார். இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்று நேரடியாகவே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழ் திரையுலகமே கர்நாடகாவை கண்டித்து நெய்வேலியில் பேரணி நடத்தினர். அதில் கலந்து கொள்ளாத ரஜினிகாந்த், சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரத மேடையில் பேசிய ரஜினிகாந்த், நதிகள் இணைப்பு குறித்து பேசினார். அந்த நேரத்திலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று சில அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர். சமீபத்தில் ஒகேனக்கல் குடிநீர் விவகாரத்தில் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதையும், தமிழ் தியேட்டர்கள் நொறுக்கப்படுவதையும் கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திலும் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது பேசிய ரஜினி, கலவரத்தை உண்டு பண்ணுகிறவர்களை உதைக்க வேண்டாமா? என்று ஆவேசமாக பேசினார். (பிறகு அதற்கு மன்னிப்பு கேட்டது தனி கதை).
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டம் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கான அஸ்திவாரம் அமைக்கும் கூட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ரஜினியின் அரசியல் பிரவேச முடிவுக்கு அவரது நெருங்கிய நண்பரும் தெலுங்கு நடிகருமான சிரஞ்சீவி முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில்தான் பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 comments:
=>வாங்க ரஜினி சார்! நல்லது செய்ய தொனுச்சினா வாங்க ரஜினி சார்!
http://aammaappa.blogspot.com/2008/09/blog-post_06.html
if rajni enters to politics "Thamizh naattai aandavanthaan kaappaaththanum"
சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினி , இனி ஆன்மீகத்தினால் அரசியலிலும் சூப்பர் ஸ்டார் ஆவார்.ஆமாம் .அவர் இந்தியாவையே ஆளுவார்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!