
முன்னணி நடிகைகள் அதிரடியாக சம்பளம் கேட்பதால், தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் வரவு அதிகரித்துள்ளது. நான்கு மாதங்களில் 37 புதுமுக நடிகைகள் அறிமுகமாகியுள்ளனர். ரிலையன்ஸ், சாய்மீரா, வார்னர் பிரதர்ஸ், ராடன் மீடியா என பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழ் சினிமா தயாரிப்பில் களமிறங்கியுள்ளதால், முன்னணி நடிகர்கள் தங்கள் சம் பளத்தை கோடிக் கணக்கில் உயர்த்திவிட்டனர். நடிகைகளும் சம்பளத்தில் அரை கோடியை தொடுகின்றனர்.
இதனால், நடுத்தர தயாரிப்பாளர்கள் முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் எடுக்கத் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படமெடுக்க முடியாத சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் புதுமுக நடிகர்களை வைத்து படமெடுத்து வருகின்றனர். சென்னையில் "ஸ்டுடியோ'க்கள், "கார்டன்'கள், மெரீனா கடற்கரை, எலியட்ஸ் பீச், கோவளம் பீச், மகாபலிபுரம் பகுதியில் உள்ள பண்ணை வீடுகளில் திரும்பிய பக்கமெல்லாம் படப் பிடிப்புகள் களைகட்டியுள்ளன. இந்தப் படங்களில், 80 சதவீதம் படங்களில் புதுமுக நடிகர்கள், நடிகைகளே நடித்து வருகின்றனர். புதிய தயாரிப்பாளர்கள் பலர் ஆர்வமுடன் கோலிவுட்டில் களமிறங்கியுள்ளதே இதற்கு காரணம்.
இந்த வகையில், பூனம் பாஜ்வா (தெனாவட்டு), மேக்னா (கிருஷ்ணலீலை), அனுயா (சிவா மனசுல சக்தி), வந்தனா குப்தா (அஜந்தா), நிகிதா (சரோஜா), கங்கனாசென் (தாம் தூம்), அர்ச்சனா (அகராதி), சோனா (பத்து பத்து), மாதவிசர்மா (வண்ணத்துபூச்சி), ரம்யாநம்பீசன் (ராமன் தேடிய சீதை), அட்ஷயா (எங்கள் ஆசான்), ரெய்னா, ஜனனி (அலிபாபா), பாக்யா (அகம் அறிய ஆவல்), பூர்ணா (கொடைக்கானல்), சவுந்தர்யா, தனுஜா (நாளை நமதே), மீனாட்சி (பெருமாள்), தனலட்சுமி (மறுஅவதாரம்), நிக்கோல் (அடடா என்ன அழகு), சிந்தி (சற்று முன் கிடைத்த தகவல்), சோனியா (நேசி), சாகித்யா (தோழா), தென்றல் (ஐம்புலன்), பூர்ணா (முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு), யசோதா (மாஸ்கோவில் காவிரி), ரகசியா (இந்திர விழா), வைணவி (ஏன் இப்படி மயங்கினாய்), லக்ஷா (தோழா), ரிதிமா (எங்க ராசி நல்ல ராசி), மோகனா (மாதவி), கீர்த்தி சர்மா (நினைவில் நின்றவன்), மேக்னா நாயுடு (பந்தயம்), நிஷாகோத்தாரி (கார்த்தீகை), தர்ஷனா (குங்குமப்பூவும் கொஞ்சுப்புறாவும்), ஹசன் சாரிகா (கி.மு.,) என 35 படங்களில் 37 புதுமுக நடிகைகள் அறிமுகமாகியுள்ளனர்.
இப்படி புதுமுகங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் திரும்பியதற்கு காரணம் பற்றி பிரபல தயாரிப்பாளர்கள் சிலரிடம் கேட்டபோது, "சினிமாவுக்குள் பல கார்ப்பரேட் கம்பெனிகள், கால் வைத்துள்ளதால், முன்னணி நடிகர், நடிகைகளின் காட்டில் பண மழைக்கு பஞ்சமில்லை. அவர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க இந்த நிறுவனங்கள் தயாராக உள்ளதால், பல நடிகர், நடிகைகள் இங்குள்ள பிரபல தயாரிப்பாளர்களின் படங்களுக்கு "கால்ஷீட்' கேட்டால் கூட தவிர்க்கும் நிலை உள்ளது. கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, விஷால் ஆகியோர், ஒரு படம் முடிந்த பிறகே மறு படத்திற்கு கால்ஷீட் கொடுப்பதால், இவர்களை வைத்து படமெடுப்பது எளிதானதில்லை.
"நடிகைகள் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களுக்கு கூட தேதிப்படி கால்ஷீட் ஒதுக்கிக் கொடுப்பர். நயன்தாரா, ஸ்ரேயா, த்ரிஷா, அசின் மற்ற மொழிப் படங்களிலும் நடித்துவருவதால் "கால்ஷீட்'டுக்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. சிநேகா, நமீதா, ஜோதிர்மயி, சந்தியா, மீரா ஜாஸ்மின், பத்மப்ரியா ஆகியோர் இரண்டு, மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கின்றனர்.
"அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் படம் எடுக்கத் தயங்கினாலும், புதிய தயாரிப்பாளர்களின் வருகை கோலிவுட்டில் அதிகரித்துள்ளது. இவர்களின் பார்வை புதுமுகங்களின் பக்கம் திரும்பியுள்ளது. பல புதுமுகங்கள் படத்தில் நடித்துவிட்டால் போதும்; அதற்காக எதையும் செய்யத் தயார் என்ற நிலையிலும் களமிறங்கியுள்ளதால், அவர்களுக்கு வாய்ப்பு தேடிக் கொடுக்க மேனேஜர்களிடையே போட்டா போட்டியே உள்ளது. பட்ஜெட்டுக்குள் படமெடுத்துவிட்டால், நஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர்,'' என்றனர்.
செய்தி-படம் : தினமலர்
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!