CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-04-30

ரஜினிக்கு ஜோடியாக ஐஸ் நடிப்பதில் மீண்டும் சிக்கல்

சிவாஜி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், இயக்குனர் ஷங்கரும் இணையும் படம் ரோபோ. இந்த படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் மிக மிக பிரமாண்டமாக தயாராக இருப்பதாக படத்தை தயாரிக்கும் ஐங்காரன் பிலிம்ஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. பின்னர் அவர் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாகவும், அதனால் ரோபோ படத்தில் நடிக்கவில்லை என்றும் செய்திகள் பரவின. இந்த செய்திகளை மறுத்த ஐஸ்வர்யா ராய், தான் ரஜினியுடன் நடிக்கப்போவதை உறுதி செய்தார்.

இந்நிலையில் ரோபோ படத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய் நடிப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் டைரக்டர் மணிரத்தினம் ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சனை வைத்து ஒரு புதிய படம் எடுக்க முடிவு செய்திருப்பதுதான். மணிரத்தினத்தின் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய்தான் நாயகியாம். இந்த 2 படங்களின் சூட்டிங்கும் வருகிற செப்டம்பர் மாதம் துவங்குகிறது. இதனால் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதா, கணவர் ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பதா என்ற குழப்பத்தில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாராம்.

சினேகா வாழ்க்கை வரலாறு : நிருபர் டைரியில் இருந்து...!

புன்னகை இளவரசி என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகை சினேகா தமிழ் திரையில் கால் பதித்து 8 ஆண்டுகள் முடியப்போகிறது. இன்னமும் முன்னணி நடிகை போல பல படங்களை கைவசம் வைத்துள்ளார். எப்படி ஒரு நிருபரின் கையில் கண்டிப்பாக பேப்பர், பேனா இருக்க வேண்டுமோ... அதேப்போல சினிமா நிருபரின் டைரியில் நடிகர்- நடிகைகளில் பயோடேட்டா இருக்க வேண்டும். இனி என் டைரியில் இருந்து சிலபல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அந்த வரிசையில் என்னை மட்டுமல்ல தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கவர்ந்து வைத்துள்ள பு.இ. சினேகாவின் வாழ்க்கை வரலாறை இங்கே தொகுத்து அளிக்கிறேன். சினிமா ரசிகர்கள் எனக்கு தரும் ஊக்கத்தைப் பொருத்து நிருபர் தளம் இன்னும் விரிவடையும்.

பிறந்த நாள் : அக்டாபர் 12
பிறந்த ஊர் : மும்பை
இயற்பெயர் : சுகாசினி
சிறப்பு : புன்னகை
அறிமுக படம் : விரும்புகிறேன்

சினேகாவின் வாழ்க்கை வரலாறு:
சுகாசினி என்ற பெயரையுடைய சினேகா உண்மையிலேயே சினேகமான நடிகை. விரும்புகிறேன் படத்தில் நடிகர் பிசாந்துடன் நடிக்க கிடைத்த வாய்ப்புதான் திரையுலகில் நுழைய அடித்தளம் அமைத்து கொடுத்தது. ஆனால் 2001ம் ஆண்டு என்னவளே என்ற படம்தான் சினேகாவுக்கு முதலில் வெளியானது. அந்த ஆண்டிலயே அவர் நடித்த ஆனந்தம் படம் சூப்பர் ஹிட். இதைத்தொடர்ந்து சினேகாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன. ரசிகர்கள் மத்தியில் புன்னகை இளவரசியாக திகழ்ந்த சினேகாவும் காதல் சர்ச்சையில் சிக்கினார். அவரது ஆண் நண்பர் நாக் ரவியுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்தியை கண்ணீருடன் மறுத்து வந்த சினேகா தற்போது தொடர்ந்து கலைப்பணி ஆற்றி வருகிறார். 2004ம் ஆண்டு வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் சினேகாவுக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

சினேகா இதுவரை நடித்துள்ள திரைப்படங்கள்:
2001 - என்னவளே (முதலில் வெளிவந்த படம்)
2001 - ஆனந்தம்
2002 - விரும்புகிறேன் (முதலில் நடித்த படம்)
2002 - உன்னை நினைத்து
2002 - பார்த்தாலே பரவசம்
2002 - பம்மல் கே. சம்பந்தம்
2002 - ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
2002 - ஏப்ரல் மாதத்தில்
2002 - புன்னகை தேசம்
2003 - காதல் சுகமானது
2003 - வசீகரா
2003 - கிங்
2003 - பார்த்திபன் கனவு
2004 - அது
2004 - ஜனா
2004 - ஆட்டோகிராப்
2004 - போஸ்
2004 - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
2004 - சின்னா
2005 - ஆயுதம்
2005 - ஏபிசிடி
2006 - மெர்குரிப் பூக்கள்
2006 - புதுப்பேட்டை
2007 - நான் அவனில்லை
2008 - பிரிவோம் சந்திப்போம்

இதுதான் தசாவதாரம் கதை


நடிகர் கமல்ஹாசன் 10 வித்தியாசமான கெட்அப்களில் நடித்துள்ள படம் தசாவதாரம். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்பிரமாண்ட படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்டு தசாவதாரம் ஆடியோவை வெளியிட்டார். தமிழக முதல்வர் கருணாநிதி முதல் ஆடியோவை பெற்றுக் கொண்டார். ரூ.10 கோடி செலவில் நடந்த இந்த பிரமாண்ட விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், மம்முட்டி உள்பட இந்தியாவின் பிரபல நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தசாவதாரம் ஆடி‌யோவை வெளியிட வந்த ஹாலிவுட் சூப்பர் நடிகர் ஜாக்கிசான், இந்திய நடிகர்களை மதிக்கவில்லை, இந்திய தண்ணீரை குடிக்கவில்லை, மல்லிகா ஷெராவத்தை தவிர வேறு யாரையும் தனது அறைக்குள் அனுமதிக்கவில்லை, இந்திய உணவுகளை வெறுத்தார் என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்ததும், அதற்கு அதிரடியா ஜாக்கிசான் பதில் அளித்ததும் வேறு கதை.

சரி விஷயத்துக்கு வருவோம். தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி தசாவதாரம் படத்தை புகழ்ந்து தள்ளினார். நடிகர் ஜாக்கிசானும் தன் பங்குக்கு தசாவதாரத்தில் கமல்ஹாசனின் நடிப்பு பற்றி பாராட்டி பேசினார். நடிகர் விஜய் பேசும்போது, தசாவதாரம் படத்‌தின் டிரைலரை பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன், என்றார். இந்த விழாவில் ஏற்புரையாற்றிய நடிகர் கமல்ஹாசன், தசாவதாரம் படத்தைப் பற்றிய தகவல்களை இதுவரை ரகசியம் காத்து வந்தோம். இனி மெல்ல மெல்ல தசாவதாரம் பற்றிய செய்திகள் வெளியாகும் என்று கூறினார்.

இந்நிலையில் தசாவதாரம் படத்தின் கதை வெளியாகி கோலிவுட்டை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. 14ம் நூற்றாண்டு கதைதான் தசாவதாரம் படத்தின் கதையாம். 14ம் நூற்றாண்டில் துவங்கும் இப்படத்தில், நாராயணன், சிவன் இருவரையும் வழிபடும் பக்தர்களுக்கு இடையே பிரச்னை ஏற்படுகிறது. அந்தணரான கமல்ஹாசனிடம், சிவனை வணங்க சொல்லி மன்னன் வற்புறுத்துகிறான். அதற்கு கமல் முடியாது என்று மறுக்கிறார். இதனால்‌ ஆவேசப்படும் மன்னன், கமல்ஹாசனின் கை, கால்களை கட்டி கடலில் தூக்கி எறிய உத்தரவிடுகிறான். அடுத்தடுத்து பிறவிகள் எடுக்கும் கமல்ஹாசனை சிவனா? நாராயணனா? என்ற பிரச்னை தொடர்கிறது. காலத்திற்கு ஏற்றபடி எதிர் எதிராக நின்று மல்லுகட்டுவதுதான் மொத்த கதையும். படத்தில் கமல் எடுக்கும் 10 அவதாரங்களிலும் ஒரு ரங்கநாதர் சிலையும் இடம்‌பெறுமாம். நடிகை அசின் பிராமண பெண்ணாக வந்து ரங்கநாதரை வழிபடுகிறார். படத்தில் மல்லிகாஷெராவத்தின் கிளுகிளுப்புக்கு பஞ்சமே இருக்காதாம்.
தசாவதாரம் படத்தின் கதையில் க்ளைமாக்ஸ் என்ன என்பதை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்களாம் தசாவதாரம் படக்குழுவினர். தசாவதாரம் கதை வெளியானதால் கோலிவுட்டில் இதுபற்றியே பரபரப்பாக பேசப்படுகிறது.

2008-04-29

ரஜினி அரசியலுக்கு வர வேண்டி கிடா வெட்டிய ரசிகர்கள்


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டி மதுரையில் அவரது ரசிகர் மன்றத்தினர் கிடா வெட்டி சாமி கும்பிட்டனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எண்ணம். ஆனால் ரஜினியோ அரசியல் பக்கம் தலை வைத்து படுக்கப்போவதில்லை என்ற முடிவிலேயே பல ஆண்டுகளை கடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டி மதுரையில் அவரது ரசிகர்கள் ஆட்டுக் கிடாக்களுடன் ஊர்வலம் நடத்தி, கிடா வெட்டி, பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். மதுரை முனிச்சாலை 6வது தெருவிலிருந்து ஆடுகளுடன் ஊர்வலமாக கிளம்பிய ரசிகர்கள் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சென்றனர். அங்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். அன்னதானமும் நடத்தப்பட்டது. ரஜினிகாந்திடம் அரசியல் பற்றி கேட்டால், எல்லாம் அவன் செயல்...! என்று கடவுளை கை காட்டி ஒதுங்கி விடுவார். அதனால்தானோ என்னவோ... ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி அவரது ரசிகர்கள் கடவுளிடம் வேண்டுகிறார்கள்.

வருக வருக!


தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, சினிமா செய்திகளை உடனுக்குடன் சுடச்சுட ‌தரும் முயற்சியில் இந்த வலைதளத்தை ஆரம்பித்திருக்கிறேன். அடிக்கடி வந்து என்னை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி!