பிரமாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரரான டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ். இந்த படத்தில் சித்தார்த், பரத், நகுல், மணிகண்டன், ஜெனிலியா உள்ளிட்ட புதுமுகங்கள் அறிமுகமானார்கள். இவர்களில் சித்தார்த் தமிழில் ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்து விட்டு தெலுங்கு பக்கம் கரை ஒதுங்கி விட்டார். பரத் காதல், வெயில் என்று தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி இடத்துக்கு வந்து விட்டார். மணிகண்டனுக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. நகுல் என்ற நகுலனுக்கு திறமை இருந்து கூடவே எடையும் அதிகமாக இருந்ததால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.
பாய்ஸ் படத்தில் நடித்தபோது நகுலின் எடை 108 கிலோ. நடிகை தேவயானியின் சகோதரரான இவருக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் அதற்கு உடல் எடை ஒரு பெரிய தடையாகவே இருந்தது. அந்த நேரத்தில்தான் தனது சகோதரி தேவயானி மற்றும் அவரது கணவர் டைரக்டர் ராஜகுமாரன் ஆகியோரது ஆலோசனைப்படி எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. 108 கிலோ எடை 73 கிலோ ஆனது. அதன் பின்னர்தான் காதலில் விழுந்தேன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்கிறார் நடிகர் நகுல். அவரது எக்ஸ்குளூசிவ் பேட்டி வருமாறு :
கிட்டத்தட்ட 35 கிலோ எடையை குறைத்தது எப்படி?
பாய்ஸ் படத்திலல் நடித்தபோது என்னுடன் நடித்தவர்கள் எல்லாம் ஒல்லியாக இருந்தார்கள். நான் குண்டான தோற்றத்துடன் தனியாக தெரிந்தேன். படத்தை பார்த்து விட்டு என் குடும்பத்தில் உள்ளவர்களே உடலை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். அதனால் உடலை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கடுமையான டாக்டரின் ஆலோசனைப்படி உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தேன். சாக்லேட், ஐஸ் க்ரீம், அரிசி சாதம் உள்ளிட்டவைகளை குறைத்துக் கொண்டேன். நல்ல உடற்பயிற்சியும் செய்தேன். மொத்தத்தில் முடியும் என்று நினைத்தேன். உடல் எடையை குறைத்து விட்டேன்.
ஹீரோ ஆனது பற்றி?
ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் நீண்ட நாட்களாகவே இருந்தது. என் அத்தான் ராஜகுமாரன் என்னை ரொம்பவே ஊக்குவிப்பார். 'நான் மட்டும் பெரிய டைரக்டரா இருந்தா உன்னை வச்சு படம் எடுப்பேன் அடிக்கடி சொல்வார். அவர்தான் எனக்கு காதல், ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கவும், டயலாக் பேசவும், பாடி லாங்குவேஜ் காட்டவும் பயிற்சி கொடுத்தார். ஒரு ஹீரோவுக்கான தகுதிகள் என்னென்ன என்று கற்றுக் கொடுத்ததுடன் என் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என் அக்காவுக்கும், அத்தானுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காதலில் விழுந்தேன் வெற்றியை எதிர்பார்த்தீர்களா?
காதலில் விழுந்தேன் படத்தை முதலில் அட்லாண்டிக் சினிமாஸ் நிறுவனம்தான் தயாரித்தது. அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதனை வாங்கி விளம்பரப்படுத்தியது. சன் குழும நிறுவனங்களில் வெளியிடப்பட்ட விளம்பரத்தால் இன்று பட்டிதொட்டியெங்கும் காதலில் விழுந்தேன் படத்துடன் நானும் பிரபலமாகியிருக்கிறேன்.
அடுத்து பட வாய்ப்புகள் வந்துள்ளதா?
காதலில் விழுந்தேன் ஹிட் ஆனதால் எனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதையுள்ள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறேன். எனது அக்கா தேவயானி தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளேன் என்கிறார் நகுல்.